கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்குகின்றனர். உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் மனித அழிவுகள் ஏற்படுகின்ற போது, இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்ற போது, ஏனைய பகுதிகளில் வாழ்கிறவர்கள் அது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தத்தம் வாழ்வை குறித்தும் பயணங்களை குறித்தும் சிந்தித்தார்கள். அந்தப் போக்கை கொரோனா மாற்றியுள்ளது.
இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் இடையிலான உறவுகளின் வெளிகளை இந்த இடர்பாட்டுக்காலம் ஒழுங்குபடுத்துகின்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதுதான் தீர்வு என்பதே உலகமெங்கும் கைக்கொள்ளப்படும் நடைமுறை.
மனிதர்களற்ற உலகின் நகரங்களிலும் கிராமங்களிலும் பறவைகளும் மிருகங்களும் உலாவுகின்றன. உண்மையில் இந்தப் பூமி யாருடையதோ அவர்கள் இந்தத் தருணத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். நகரத்தின் கொங்கிறீட் கட்டிடங்களின் மீது அமர்ந்து சோகமாக இருக்கும் பறவைகளும் காப்பெற் வீதியில் படுத்திருந்து வெறித்துப் பார்க்கும் மிருகங்களும் நமக்கு ஏராளமானவற்றைச் சொல்கின்றன.
நாம் இயற்கைக்கு எதிராக செய்கின்ற சதிகளின் விளைவுகள் தான் இப்பூமியில் ஏற்படும் அனர்த்தங்கள். நிலம், காடு, கடல், ஆகாயம் என இயற்கை அளித்த பெருங்கொடைகள் ஒவ்வொன்றிலும் மனிதன் ஏற்படுத்துகின்ற அபாய செயற்பாடுகளின் விளைவுகள் பயங்கரமானவை. வரட்சி, சுனாமி, சூறாவளி, நில நடுக்கம் என்று மிகுந்த அபாயங்களை நம்ப முடியாத இயற்கையின் கொடும் புதிர்களை இப் பூவுலக மனிதர்கள் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். புதிது புதிதான கொள்ளை நோய்கள் மனித உயிர்களை காவு கொண்டு உலகக் கிடங்கில் இப்படித்தான் இருக்கின்றன.
நிலத்தை பெரு விலைக்கு விற்றோம். காடுகளை அழித்து மரங்களை கொன்று சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தினோம். தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் யுகத்திற்குள் மாண்டோம். கொரோனா மாத்திரமல்ல எல்லாவிதமான தொற்று
அபாயங்களில் இருந்தும் மனிதர்கள் மீண்டிருக்க, தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் முன்னுதாரணமாகின்றன.
கை கொடுப்பதைத் தவிர்த்து ஒருவரை ஒருவர் வணங்கி வணக்கம் செலுத்துகின்ற முறையை நாகரிகமற்ற முறையாக சில தரப்பினர் கருதியதுண்டு. ஆனால் இன்று அதுவே பொருத்தமானதும் ஆரோக்கியமானதுமான முறையாகப் பின்பற்றப்படுகின்றது. உலகத் தலைவர்கள் பலரும் இந்த முறையைப் பின்பற்றி ஒருவரை ஒருவர் வணங்கி வணக்கம் செலுத்துகின்றனர். அதைப் போல மஞ்சள் தெளித்தல், சாணம் தெளித்தல், வேப்பிலைகளை தொங்க விடுதல், நீராடி வீடுகளுக்குள் செல்லுதல், துடக்கு கழித்தல் போன்ற தமிழர் மரபுச் செயற்பாடுகள் எந்தளவு முக்கியத்துவம் என்பதும் இன்று உணரப்படுகின்றது. இவை பிற்போக்கானவை அல்லது மூட நம்பிக்கை சார்ந்தவை என்று ஒருகாலத்தில் எள்ளி நகையாடப்பட்டன. ஆனால் வாழ்வியலுக்கான அறிவியல் பூர்வமான விடயங்கள் இவை என்பதை இன்றைக்கு உணருகின்ற காலம் வந்திருக்கின்றது. ஆரோக்கியமாக வாழ நிறையுணவை உண்ணுதல், உணவுச் சமநிலையைப் பேணுதல், பாரம்பரிய உணவுகளை உண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல் என்பனவும் இப்போது அவசியமாக உணரப்படுகின்றது. அந்நியப் பண்பாட்டுத் தாக்கம், உலகமயமாதல் விரிவாக்கம் போன்றவற்றால் பாரம்பரிய உணவு மற்றும் கலாசார முறைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியற்ற, குறைந்த ஆயுளைக் கொண்ட மனித சமூகம் உருவாகத் தொடங்கியது. உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள, இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீனப்பெருஞ்சுவரையும் இமயமலையையும் கூட வெகுதூரத்திலிருந்து பார்த்து ரசிக்க கொரோணா வழியமைத்துள்ளது.
வாகனப் பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில், நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் வாகன விபத்துக்களால் இறக்கும் மக்களின் தொகை பெருமளவு குறைவாகவே காணப்படுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கும் அவர்களின் நல்வாழ்விற்கும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருக்கிற இந்தப் போராட்டத்தின் மத்தியிலும், இரக்கத்தின் மதிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் போன்றவற்றை நினைவு கொள்கின்றோம். தற்பொழுது இந்தத் தொற்றுநோய் உலக மக்களை அச்சுறுத்துகின்றது. நாம் இனம், கலாசாரம் பாலினம் என்ற வேறுபாடுகள் இல்லாமல், பொறுப்புடனும் மனிதநேயத்துடனும் இருக்க வேண்டும், மிக அவசியமான தேவைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும் என உணருகின்ற காலம் வந்திருக்கின்றது. எமது முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர். இயற்கையை கொண்டாடினர். இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழ்ந்தனர். இதனால் நீண்ட ஆயுளையும் செழிப்பையும் கொண்ட வாழ்வை அனுபவித்து மாபெரும் சாதனையையும் அதிசயங்களையும் செய்தனர். நாமோ இன்று பின்னோக்கி நகர்கிறோம். மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ மறுத்தால் இதுபோன்ற அழிவுகளை இன்னும் சந்திக்க நேரிடும். கொரோனா அபாயத்தை ஓர் அனுபவமாக, எச்சரிக்கையாக நாம் புரிந்து கொள்வதுதான் அறிவார்ந்த செயல்.
நன்றி
திருமதி. பவானி சற்குண செல்வம்